கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தொட்டநாகரா கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா. இவரது மகன் சுப்ரீத் (7). தனியார் பள்ளியில் படித்து வந்தான். ஆஷாவிற்கு பிளிசாரே கிராமத்தை சேர்ந்த சதீஸ் என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. 3 ஆண்டுகள் ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்த அவர்கள், பின் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்துவிட்டனர். ஆஷா தனது மகனுடன், தொட்டநாகராவில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆஷாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த உமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
3 மாதத்திற்கு முன் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு, அதே கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் சிறுவன் சுப்ரீத்திற்கு உமேஷ் வீட்டுபாடம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தார். அப்போது சிறுவன் உமேஷ் சரியாக வீட்டுபாடம் எழுதாததால் ஆத்திரம் அடைந்த உமேஷ், சிறுவனை அடித்து உதைத்து, கீழே தள்ளினார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் உயிருக்கு போராடினான். மகனின் சத்தம் கேட்டு ஓடி வந்த ஆஷா உடனே அவனை சக்லேஷ்புரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவிற்கு கொண்டு செல்லும்படி கூறினர். இதையடுத்து பெங்களூருவிற்கு கொண்டு செல்வதற்குள் சிறுவன் இறந்துவிட்டான். இதுகுறித்து ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உமேசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.