அமெரிக்கா நாட்டில் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் இருக்கும் பள்ளியில் 14 மாணவர்களும் மற்றும் ஒரு ஆசிரியரும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய வாலிபன் ஆவார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபன் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகளை ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைத் தவிர எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற விபரம் உடனடியாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. அதில் 18 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று மாலை வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசுவார் என்று வெள்ளை மாளிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சூரிய அஸ்தமனம் வரை வெள்ளை மாளிகை மற்றும் பிற பொது இடங்களில் அமெரிக்கக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.