பேருந்தை யானை துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, சேர்மாலம், ஆசனூர் உள்ளிட்ட 10 வனசரகங்கள் அமைந்துள்ளது. இந்த வனசரகங்களில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று யானைகள் குட்டிகளுடன் காரப்பள்ளம் சோதனை சாவடி கருகே நின்று கொண்டிருந்தது . அப்போது அவ்வழியாக 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது.
இந்நிலையில் யானையை பார்த்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை சிறிது தூரத்தில் நிறுத்தினார். ஆனால் யானை அந்த பேருந்தை பின் தொடர்ந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்றுள்ளது. இதனை பார்த்த பேருந்தில் இருந்த பயணிகள் பண்ணாரி தாயே எங்களை காப்பாற்று என்று கத்தி கூச்சலிட்டனர்.இதனையடுத்து சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. அதனை பார்த்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். அதன் பின்னர் பேருந்து அங்கிருந்து சென்றுள்ளது. இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.