இத்தாலியில் பெற்ற மகனை தந்தையே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் உள்ள மொராசோனின் கம்யூன் என்ற பகுதியில் வசித்து வரும் டேவிட் பைடோனி ( வயது 40 ) என்பவருக்கு திருமணமாகி ஒரு மகன் ( வயது 7 ) இருந்தார். இந்த நிலையில் டேவிட் பைடோனிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து டேவிட் பைடோனியின் மனைவி ஒரு கட்டத்தில் காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெறுவதற்காக வழக்கு தொடர்ந்தார்.
அப்போது நீதிமன்றத்தில் டேவிட் பைடோனி ‘என் மகன் என்னுடன் தான் இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதற்கு நீதிபதியும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால் டேவிட் பைடோனின் மகனுக்கு தந்தையுடன் செல்வதற்கு சிறிதும் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த சிறுவனை சமாதானப்படுத்தி அவருடைய தந்தையுடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் டேவிட் பைடோனி வீட்டுக்கு வந்த தனது மகனை கத்தியால் கழுத்தை கரகரவென அறுத்து பின்னர் சிறுவனின் உடலை அலமாரியில் மறைத்து வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
அதன் பிறகு நேராக மனைவின் வீட்டிற்கு சென்ற டேவிட் “உனது மகனை நான் அழைத்து வந்துள்ளேன்” என்று கூறி அவரை நைஸாக வெளியே வரவழைத்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த டேவிட்டின் மனைவி அலறி துடித்ததால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து டேவிட் பைடோனி பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் தனது மனைவியின் செல்போனுக்கு “என்னுடைய வாழ்க்கையை நாசம் செய்ததாலும், என் மகனை பிரிக்க முயன்றதாலும் உன்னை குத்தினேன்” என்று மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதையடுத்து இத்தாலி காவல்துறையினர் தப்பியோடிய டேவிட் பைடோனியை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட அந்த ஏழு வயது சிறுவனின் தாத்தா, தந்தையுடன் செல்ல மாட்டேன் என்று கூறிய சிறுவனை நான் தான் சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். அதுவே தற்போது பெரிய தவறாக முடிந்துவிட்டது என்று கூறி கதறி அழுதுள்ளார்.