எருமையை பார்த்ததும் சாலை ஓரம் ஒதுங்கிய நபர் கோப்ரா நாகம் கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆப்பிரிக்காவில் உள்ள Mozambique பகுதியில் செபஸ்டின் விக்கர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் வசித்து வருகின்றனர். ஆனால் செபஸ்டின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்கடி பார்க்க முடியவில்லை என ஏங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் பிரித்தானியாவின் உள்ள ஸ்காட்லாந்து நாட்டிற்கு சென்று வாழ்வதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு செபஸ்டின் தனது வாடிக்கையாளர் ஒருவருடன் சாலையில் சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையில் ஒரு எருமை மாடு நின்றுள்ளது.
இதனை பார்த்த செபஸ்டின் தனது வாடிக்கையாளருடன் ஓரமாக சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்து ஒரு கொடிய விஷப்பாம்பு செபஸ்டினை கடித்துள்ளது. இதனால் வழியில் துடித்த அவர் அந்த தருணத்திலும் தனது மனைவி அமண்டா என்பவருக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக செபஸ்டினை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டதாக அழைப்பு வந்துள்ளது.
இதுகுறித்து அமண்டா கூறியதாவது. எனது கணவரை பாம்பு கடித்த உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். எனது கணவரை கடித்தது காடுகளில் வசிக்கும் கோப்ரா நாகமாக இருக்கலாம். ஏனென்றால் அது ஆப்பிரிக்காவில் அதிகமாக காணப்படும். இதனால் அவர் மிகுந்த வலியையும், வேதனையும் அனுபவித்து இறந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவரை எருமை தாக்கியது. இதனால் எருமையை பார்த்த அவர் சாலை ஓரம் ஒதுங்கிய போது பாம்பு கடித்திருக்கிறது. இதனையடுத்து அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இப்போது அதை நினைத்தாலும் மனது வலிக்கிறது என அவர் அதில் கூறியுள்ளார்.