கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கும்பகல்லு கிராமத்தில் உள்ள ஸ்ரீராமகுன்று மலையில் மகேந்திர பாபு என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிலத்தில் அரசு அனுமதி பெற்று கேரளாவைச் சேர்ந்த அக்கீம் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்குவாரியில் கற்களை உடைப்பதற்காக வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. அப்போது வெடியின் அதிர்வால் எதிர்பாராதவிதமாக பெரிய பாறாங்கல் ஒன்று மேலிருந்து கீழே உருண்டு விழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கல்குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்களின் மேலே பாராங்கல் உருண்டதில் அதன் அடியில் சிக்கி பலர் உடல் நசுங்கி மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவம் அறிந்த குண்டலுபேட்டை டவுன் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்து தொடர்பான போலீசார் நடத்திய விசாரணையில் 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 6 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.