இன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ‘கானா’ என்ற நாட்டில் சரக்கு லாரி ஒன்று வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு பொகாசா என்ற நகர் வழியாக சென்று கொண்டிருந்தது. இதையடுத்து லாரி அபியெட் என்ற சந்தை பகுதி வழியாக சென்றது. அப்போது அங்கு வேகமாக வந்த பைக் ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் லாரியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதனால் ஏற்கனவே சரக்கு லாரியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்தும் பயங்கரமாக வெடித்துள்ளது. மேலும் வண்டியில் ஏற்றப்பட்டிருந்த வெடிமருந்துகள் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் அருகில் உள்ள பகுதிகள் அனைத்தும் தரைமட்டமானது.
இதற்கிடையே இந்த கோர சம்பவத்தில் 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 59 பேர் பலத்த காயமடைந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.