முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதியின்றி அரசு நிலங்களில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண்ணை எடுத்துள்ளதாக தேனி மாவட்டம், உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் முன்னாள் துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்துக்கு தன்னுடைய உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவருடைய உறவினர்கள் உடந்தையாக இருந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மணல் எடுத்த பிறகு அந்த அரசு நிலங்களை தனியார் சொத்துக்களாக மாற்றியுள்ளதாகவும் உடனடியாக இது குறித்து விசாரணையை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடுமாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த குற்றத்தில் வருவாய் துறை அதிகாரிகள் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
எனவே சென்னை உயர்நீதிமன்றம் தமிழக தொழில் துறை கூடுதல் செயலர் கனிமவள துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்ட மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து உரிய உத்தரவினை பிப்ரவரி 3-ம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.