சொந்த கட்சியில் நடைபெறும் அதிகார போட்டியை மறைக்க திமுகவை விமர்சித்து வருகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை சாடியுள்ளார்.
கோவை, ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.. முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, 663 கோடி ரூபாயில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், 1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ 588 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் ஆற்றிய உரையில், அனைத்து துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது *தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் உற்றுநோக்கி வருகிறார்கள். கோவை மாவட்டம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். கோவையில் இதுவரை ரூ.1200 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ₨1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை என்றாலே பிரம்மாண்டம் தானே, தொழில் வளம் கொண்ட மாவட்டமாக கோவை விளங்கி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5வது முறை வந்துள்ளேன். இந்த மாவட்டத்தின் மீதும் மாவட்ட மக்களின் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு இது. என்ன செய்தோம் என கேட்பவர்களுக்கு இங்கு நான் கம்பீரமாக கூறிக்கொள்கிறேன். ஏதோ சிலருக்கு உதவிகளை செய்து கணக்கு காட்டுபவர்கள் நாங்கள் அல்ல” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், மக்களுக்கு கணக்கில்லாத உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது. திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என பொத்தாம் பொதுவாக சிலர் கூறி வருகின்றனர். தன்மானம் இல்லாத இனமானம் என்னவென்று தெரியாத கூட்டம் தான் இன்று திமுக அரசை விமர்சிக்கிறது. திமுகவை விமர்சிப்பவர்கள் மக்கள் மத்தியில் வந்து பேச வேண்டும் பேட்டி கொடுத்துவிட்டு ஓடி ஒழிய கூடாது. யார் பாராட்டையும் எதிர்பார்த்து நான் செயல்படவில்லை, மக்களின் பாராட்டுகள் எனக்கு போதும். என்னை எதிர்த்தால் தான் நான் மேலும் மேலும் செயல்படுவேன். மக்களுக்கு ஒருபோதும் தீங்கு விளைவிக்க விடமாட்டேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மற்ற மாநிலங்கள் நம் மாநிலத்தை கூர்ந்து கவனித்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இருக்கக்கூடிய சிலரால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. கொளத்தூர் தொகுதியை போன்று அனைத்து தொகுதிகளுக்குமே முக்கியத்துவம். உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் 234 தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள 10 கோரிக்கையை பட்டியலிட்டு அனுப்ப எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் மட்டுமல்ல பாஜக, அதிமுக என அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் கூறியுள்ளேன்.
இந்த திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டம் என கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஆனால் அவர்கள் இத்திட்டத்திற்கு பாராட்டவில்லையே என்று நான் நினைக்க மாட்டேன். அதை எதிர்பார்த்து கடமை ஆற்றுபவன் இந்த ஸ்டாலின் அல்ல. சொந்த கட்சியில் நடைபெறும் அதிகார போட்டியை மறைக்க திமுகவை விமர்சித்து வருகிறார்கள் விமர்சனங்களை நினைத்து கவலைப்பட மாட்டேன். தனிப்பட்ட விமர்சனத்தை கண்டு அஞ்சுபவன் நான் இல்லை. எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான், விமர்சனங்களை விரும்புபவன் நான். சொந்த கட்சியில் நடைபெறும் அதிகார போட்டியை மறைக்க திமுகவை விமர்சித்து வருகிறார்கள். திமுகவை விமர்சிப்பதற்கு அவர்களுக்கு எந்த தகுதியோ,அதிகாரமோ கிடையாது” என்று விமர்சித்தார்.
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் சொந்த கட்சியில் நடைபெறும் அதிகாரப் போட்டியை மறைக்க திமுகவை விமர்சித்து வருகிறார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.