அங்கன்வாடி மையங்களுக்கு உணவு தானியங்கள், முட்டைகள் வழங்கப்படாததால் பெற்றோர் தங்கள் வீட்டிலிருந்தே உணவு கொடுத்து அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தன. மேலும் அங்கன்வாடி மையங்கள் தற்போது திறக்கப்பட்டாலும் உணவு தானியங்கள் வழங்கப்படாததால் குழந்தைகள் வீட்டிலிருந்தே உணவு கொண்டு வரும் நிலை உருவாகியுள்ளது. தற்போது கர்நாடகாவில் 65,911 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சொந்த கட்டடத்தில் 44,312 மையங்களும், மற்றவை வாடகை கட்டடத்திலும் செயல்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து பெரும்பாலான மையங்களில் குடிநீர் உட்பட மற்ற அடிப்படை வசதிகள், சமையலறை வசதிகள் இல்லை. மேலும் மாதந்தோறும் குழந்தைகள், கர்ப்பிணியர் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு அங்கன்வாடி மூலமாக உணவு தானியங்கள், முட்டை வழங்கப்படுகிறது. கொரோனா பரவலால் இரண்டு மாதங்களாக மையங்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது பிப்ரவரி 14-ல் மீண்டும் திறக்கப்பட்டது. இதுவரை உணவு தானியங்கள், முட்டைகள் வழங்கப்படவில்லை.
இதனால் பெற்றோர் தங்கள் வீட்டிலிருந்தே உணவு கொடுத்து அனுப்புகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி ஊழியர்களே முட்டை வாங்க வேண்டியுள்ளது. இதற்காக மாதந்தோறும் அரசு 125 ரூபாய் வழங்குகிறது. மார்க்கெட்டில் முட்டை விலை அதிகரித்ததால், ஊழியர்களால் வாங்க முடிவதில்லை. மேலும் காஸ் ஸ்டவ் பழுது பார்க்கப்படவில்லை. இதனை அடுத்து ஊழியர்கள் தங்கள் சொந்தப்பணத்தை செலவிட்டு பழுது பார்க்கின்றனர்.