அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களையும் தற்போது வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது படிப்படியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்தியஅரசு திரையரங்குகள் திறப்பதற்கு வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான சில பாதுகாப்பு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது .அதாவது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதற்கு முன்பாக திரையரங்கு முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.
டிக்கெட் பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நேரில் டிக்கெட் பதிவு செய்யக்கூடாது. மேலும் 50% இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டுமென்றும் ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடையே இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்றும் அறிவித்துள்ளது .தியேட்டர் வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக அதிகப்படியான கடைகள் திறக்கப்பட வேண்டும். திரையரங்கிற்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
மேலும் அனைவருக்கும் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமிநாசினி திரவம் வழங்கப்பட வேண்டும். திரையரங்கிற்கு வரும் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்படுவர். சோதனையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பின் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அனைவரையும் ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லியும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.