அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு கார் நிறுவனம் கடந்த 1995ஆம் வருடம் தமிழகத்தில் தன் தொழிற்சாலையைத் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இதையடுத்து சென்னை மறைமலைநகரில் கார் உற்பத்தி தொழிற்சாலையை போர்டு ஆரம்பித்தது. அங்கு சென்ற 1998-ல் உற்பத்தி தொடங்கப்பட்டது. அதன்பின் குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அங்கு சனாந்த் எனும் இடத்தில் தன் 2-வது தொழிற்சாலையை போர்டு நிறுவியது. சனாந்த்திலுள்ள தொழிற்சாலை அதிநவீன வசதிகளை உடையது. அங்கு உலகத்தரம் வாய்ந்த கார்கள் தயாரிப்பதற்கான வசதிகள் இருக்கின்றன.
இந்நிலையில் இந்த 2 தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்துவது எனவும் இனி ஏற்றுமதி செய்யப்போவதில்லை எனவும் முடிவெடுத்த போர்டு நிறுவனம், அதனை தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும் என்பதைக் கருத்தில்கொண்டு, சென்னை மறைமலைநகரிலுள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது தொடர்பாக டாட்டா குழுமத்துடன் தமிழ்நாடு அரசு கலந்துரையாடியது.
அப்போது வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் மறைமலைநகரிலுள்ள கார் தயாரிக்கும் நிறுவனமான போர்டு நிரந்தரமாக மூடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு சுமார் 2,500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் சூழ்நிலையில், இந்த அறிவிப்பு அங்கு பணியாற்றும் ஊழியர்களிடேயே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக நஷ்டத்தில் உள்ள இந்திய யூனிட்டை கைவிட்டு மின்சார மற்றும் தானியங்கி வாகனங்களில் தன் முதலீடுகளை போர்டு நிறுவனம் அதிகரிக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.