சென்னிமலை பகுதியில் குடிநீர் சீராக வர வேண்டும் என்று பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை முகாசிபிடாரியூர் அருகிலுள்ள கூற பாளையம் காலனி பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் நேற்று காலை 7 மணி அளவில் சென்னிமலை – பெருந்துறை சாலையில் காலி குடங்களை வைத்துக்கொண்டு சாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றுள்ளன.
இதுகுறித்து சென்னிமலை காவல்துறை இன்ஸ்பெக்டர் சரவணன், முகாசிபிடாரியூர் ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் சதீஷ் என்ற சுப்பிரமணியம் ஆகியோர் சாலை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது, எங்கள் ஊரில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து பொது குழாய் மூலம் குடிநீர் வந்தது. இந்த தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் அளவு சுமார் அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வந்தது. இதனால் எங்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு போதுமானதாக இல்லை. இந்த பிரச்சனை எங்களுக்கு நீண்ட காலமாகவே இருக்கின்றது.
நாங்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதிப்படுகிறோம். இதனால் எங்கள் பகுதிக்கு தினமும் 3/4 மணி நேரம் தவறாமல் தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கொடுத்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் பெருந்துறை ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.